Thursday, April 30, 2009

விறுவிறுப்பும் ஏமாற்றமும் நிறைந்த ஐ பி எல்..ஒரு பார்வை..


கடந்த வருடம் இந்தியாவில் வெற்றிகரமாக நடைபெற்ற ஐ பி எல் தொடர் இம்முறை தென்னாபிரிக்காவில் நடைபெறுகிறது. தொடர் ஆரம்பத்தில் பெரிதாக மைதானத்திற்கு ரசிகர் கூட்டம் வரவில்லை. ஆனால் போகப்போக ரசிகர்கள் கூட்டம் அதிகரிக்க ஆரம்பித்தது.

இம்முறை ஐ பி எல் கிண்ணத்தை டெக்கான் சார்ஜர்ஸ் அணி வெற்றி தக்க வைத்துள்ளது. யாரும் எதிர்பாராத வண்ணம் பெங்களூர் அணி இறுதிப்போட்டிக்கு தெரிவாகியது.. மும்பை, கல்கத்தா, ராஜஸ்தான் ஆகிய அணிகள் இம்முறை பெரும் ஏமாற்றம் அளித்தன. அதிலும் கடந்த முறை சாம்பியனான ராஜஸ்தான் இம்முறை மிக மிக மோசமாக விளையாடியது, பலத்த சர்ச்சைகளுக்கு மத்தியில் விளையாடிய கல்கத்தா அணிக்கு இம்முறை இறுதியிடமே கிடைத்தது. வெல்வதற்கான சந்தர்ப்பங்கள் பல இருந்தும் மும்பை அணிக்கு அது கிட்டாமல் போனது. பலர் எதிர்பார்த்த வண்ணம் சென்னை மற்றும் டெல்லி அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.

மும்பை அணியை பற்றி கூறப்போனால் கடந்த முறை சிறப்பாக ஆடிய ஜெயசூரிய இம்முறை ஓரிரு போட்டிகளில் மட்டுமே சாதித்தார். ஆனால் டெண்டுல்கரின் ஆட்டம் சற்று நம்பிக்கையாக இருந்தது. மலிங்கவின் பந்துவீச்சு அருமையாக இருந்தது. டுமினி 4 அரைச்சதங்கள் பெற்றார். சகீர் கானின் சுகயீனம் இவர்களுக்கு பாதிப்பாக இருந்து இருக்கலாம். மற்றும் இந்த அணியில் அபிஷேக் நாயர் மற்றும் பினால் ஷாவைத் தவிர மற்ற வீரர்கள் மிக மிக மோசமாக செயற்ப்பட்டனர். அதுவும் குல்கர்னியின் பந்துவீச்சு ஏதோ சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது. பிரவோ பரவாயில்லை, ஹர்பாஜனின் சுழல் சில போட்டிகளில் சரியாக எடுபடவில்லை. மற்றும் அஸ்ஹ்ரபுல், நந்தா, நேபியர் போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு அளித்திருக்கலாம். ஆரம்பம் நன்றாக இருந்த இவர்களின் முடிவு மோசமாக அமைந்து விட்டது.

பல சர்ச்சைகளுக்கு மத்தியில் விளையாடிய கல்கத்தா அணிக்கு இம்முறை ஏமாற்றமே மிஞ்சியது. பல திறைமையான வீரர்கள் இருந்தும் தோல்விகளையே தழுவினார்கள். பேசாமல் தலைமைப்பதவியை கங்குலிக்கு வழங்கியிருக்கலாம் என பலர் கூறினார்கள். இவர்களின் ஒரே ஆறுதல் கடைசி லீக் போட்டிகள் இரண்டிலும் வெற்றி பெற்றமை ஆகும். அது அவர்களின் அடுத்த வருட போட்டிகளுக்கு தயார் செய்திருக்கலாம்.

அடுத்து சாம்பியன் டெக்கன் சார்ஜர்ஸ் அணியினரை பார்ப்போம். கடந்த வருடம் மோசமாக செயல்பட்ட இந்த அணி இம்முறை வெகுவாக முன்னேறியது எனலாம். குறிப்பாக இந்த அணியில் விளையாடிய அனைத்து சர்வதேச வீரர்களும் சிறப்பாக செயல்பட்டனர். அடம் கில்கிறிஸ்ட் என்ற ஒரு அனுபவ மந்திரம் செய்த தலைமைத்துவம், அதிரடி ஆட்டம் மற்றும் கிப்ஸ், சைமன்ஸ் என்ற புயல்களின் வேகம் ஆகியவையும், ஆர் பி சிங்க், ஓஜா, சுமன் என்ற இளம் வீரர்களும் அணியின் வெற்றியை வழிவகுத்தனர். சமிந்த வாஸ் சில போட்டிகளில் பங்குபெற்று சிறப்பாக பந்து வீசினார். ஸ்காட் ஸ்டைரிஸ், ஸ்மித், எட்வர்ட்ஸ் போன்ற வீரர்களும் சிறப்பாக செயல்பட்டனர். லக்ஸ்மன் அவராகவே ஒதுங்கி இளைய வீரர்களுக்கு வாய்ப்பளித்து இருக்கலாம் என கருதப்படுகிறது. ரொஹித் சர்மாவின் துடுப்பாட்டம் அதிரவைத்தது..(ஐ பி எல் இல மட்டும் நல்லா அடியுங்க. இன்டர்நேஷனல் ல மட்டும் அடிக்கமாட்டீங்களே. எல்லா பந்துகளையும் தட்டி தட்டி அடிப்பீங்க)

அடுத்து பெங்களூர் அணி. கடந்தமுறை மந்தமாக செயல்பட்ட அணி இம்முறை இறுதிப்போட்டிக்கு தெரிவாகியது. ஆரம்பத்தில் பீட்டர்சனின் தலைமையில் பல சவால்களுக்கு மத்தியில் போராடிய அணி பின்னர் கும்ப்ளேயின் தலைமையில் சிறப்பாக செயல்பட்டது. ராபின் உத்தப்பாவை தவிர மற்ற வீரர்கள் அனைவரும் சிறப்பாக செயல்பட்டனர். அவர் மட்டும் ஏனோ தானோ என்று விளையாடினார். விராட் கொஹ்லி, பாண்டி ஆகியோருக்கு நல்ல எதிர்காலம் உண்டு. மற்றும் தென்னாபிரிக்காவின் வி டி மேர்வே புதிய அதிரடி வீரராக உருவாகியுள்ளார்.பிரவீன் குமார் சில இடங்களில் மெக் கிராத்தை நினைவுபடுத்துகிறார். ட்ராவிடின் ஆரம்ப கட்டம் நன்றாக இருந்தது, மற்றும் அரை இறுதி போட்டியில் சிறப்பாக செயல்பட்டார்.

பஞ்சாப் அணி வெற்றிகளை சந்தித்த அதே வேளையில் தோல்விகளையும் அதிகம் சந்தித்தது. யுவராஜ் சிங் இம்முறை 2 ஹட் ரிக் மற்றும் பல சிக்சர்கள் என கலக்கினார். அவருக்கு பலமாக சங்ககார, மஹேல, பிரெட் லீ, இர்பான் பதான், கடிச் என்ற அனுபவங்கள் இருந்தும் ஏதோ அரை இறுதிக்கு தகுதி பெறாமல் போனது. ஸ்ரீசாந்த் பல ஓட்டங்களை கொடுத்தார்..அதாவது பந்துவீச்சில்..அப்துல்லா அடுத்த தென்னாபிரிக்காவின் பந்துவீச்சு நட்சத்திரம் எனலாம்.

அடுத்து சென்னை அணி. ஆரம்பத்தில் சில தோல்விகளை கண்ட அணி, பின்னர் படிப்படியாக முன்னேறி அரையிறுதிக்கு முன்னேறியது. தோனி தலைமைத்துவத்தில் காட்டிய அக்கறையை துடுப்பாட்டத்திலும் கொஞ்சம் காட்டியிருந்தார். எனினும் சில போட்டிகளில் பிரகாசிக்க தவறினார். ஹெய்டேன் ஏன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாரோ தெரியவில்லை. இன்னும் விளையாடி இருக்கலாம்.. அவருடைய ஆட்டம் பிரமாதமாக இருந்தது. ரெய்னா ஒரு நட்சத்திரம். முரளி ஜகாடி என பந்துவீசும் ஓங்கியிருந்தது. பாலாஜி ரொம்பவே மெதுவாக பந்து வீசுகிறார். எனினும் ஒரு எதிர்காலம் உண்டு. ஜேகப் ஓரம் மற்றும் மோர்கெல் ஆகியோர் துடுப்பாட்டத்தில் பிரகாசித்து இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.சிறந்த களத்தடுப்பு வீரர்கள் நிறைந்த இந்த அணி இம்முறை களத்தடுப்பில் ரொம்பவே கோட்டை விட்டது. தோனியின் தலைமையில் அரை இறுதி வரை முன்னேறியது ஒரு சிறிய பெருமையே.

ராஜஸ்தான் அணி இம்முறை படு மந்தமாக செயல்பட்டது. ஷேன் வார்ன் என்ற ஒரு மந்திரவாதியின் மந்திரம் இம்முறை பலிக்கவில்லை. யுஸுப் பதான் சில போட்டிகளில் மட்டுமே பிரகாசித்தார். ஸ்மித் சரி வர விளையாடி இருக்கலாம். ஜடேஜா பரவாயில்லை. கடந்த வருடம் பல அபார வெற்றிகளை பெற்ற இந்த அணி..இம்முறை இறுதி நேரத்திலேயே வெற்றிகளை குவித்தது எனலாம்.

அடுத்து டெல்லி அணி, இவர்களை பற்றி சொல்ல தேவையில்லை. லீக் போட்டிகளில் திறமையாக விளையாடி அரையிறுதியில் தோல்வியை தழுவியது ஒரு சிறிய வருத்தமே. எ பி டி வில்லியர்ஸ், டில்ஷான், வார்னர் என அனைவரும் சிறப்பாக விளையாடினர். ஆரம்ப ஜோடி சேவாக் மற்றும் காம்பிர் இம்முறை சோபிக்க தவறினர். பந்துவீச்சில் மிஸ்ரா கலக்கினார், தினேஷ் கார்த்திக் மீண்டும் இந்திய அணிக்குள் நுழைய போராடுகிறார்.

ஆக இம்முறை போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாக இருந்து இருக்கலாம். சிலவேளை பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்து இருக்கலாம். அடுத்த வருடம் பொறுத்து இருந்து பாப்போம் யார் வெல்வார்கள் என..

2 comments:

  1. ஏப்ரல் 30லயே டெக்கான் ஜெயிப்பது தெரிஞ்சு போச்சா தல..


    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. இல்லை இல்லை..
    அப்போதுதான் எழுத ஆரம்பித்தேன்..
    இன்றுதான் எழுதி முடித்தேன்..
    நன்றி..

    ReplyDelete