Thursday, April 30, 2009

விறுவிறுப்பும் ஏமாற்றமும் நிறைந்த ஐ பி எல்..ஒரு பார்வை..


கடந்த வருடம் இந்தியாவில் வெற்றிகரமாக நடைபெற்ற ஐ பி எல் தொடர் இம்முறை தென்னாபிரிக்காவில் நடைபெறுகிறது. தொடர் ஆரம்பத்தில் பெரிதாக மைதானத்திற்கு ரசிகர் கூட்டம் வரவில்லை. ஆனால் போகப்போக ரசிகர்கள் கூட்டம் அதிகரிக்க ஆரம்பித்தது.

இம்முறை ஐ பி எல் கிண்ணத்தை டெக்கான் சார்ஜர்ஸ் அணி வெற்றி தக்க வைத்துள்ளது. யாரும் எதிர்பாராத வண்ணம் பெங்களூர் அணி இறுதிப்போட்டிக்கு தெரிவாகியது.. மும்பை, கல்கத்தா, ராஜஸ்தான் ஆகிய அணிகள் இம்முறை பெரும் ஏமாற்றம் அளித்தன. அதிலும் கடந்த முறை சாம்பியனான ராஜஸ்தான் இம்முறை மிக மிக மோசமாக விளையாடியது, பலத்த சர்ச்சைகளுக்கு மத்தியில் விளையாடிய கல்கத்தா அணிக்கு இம்முறை இறுதியிடமே கிடைத்தது. வெல்வதற்கான சந்தர்ப்பங்கள் பல இருந்தும் மும்பை அணிக்கு அது கிட்டாமல் போனது. பலர் எதிர்பார்த்த வண்ணம் சென்னை மற்றும் டெல்லி அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.

மும்பை அணியை பற்றி கூறப்போனால் கடந்த முறை சிறப்பாக ஆடிய ஜெயசூரிய இம்முறை ஓரிரு போட்டிகளில் மட்டுமே சாதித்தார். ஆனால் டெண்டுல்கரின் ஆட்டம் சற்று நம்பிக்கையாக இருந்தது. மலிங்கவின் பந்துவீச்சு அருமையாக இருந்தது. டுமினி 4 அரைச்சதங்கள் பெற்றார். சகீர் கானின் சுகயீனம் இவர்களுக்கு பாதிப்பாக இருந்து இருக்கலாம். மற்றும் இந்த அணியில் அபிஷேக் நாயர் மற்றும் பினால் ஷாவைத் தவிர மற்ற வீரர்கள் மிக மிக மோசமாக செயற்ப்பட்டனர். அதுவும் குல்கர்னியின் பந்துவீச்சு ஏதோ சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது. பிரவோ பரவாயில்லை, ஹர்பாஜனின் சுழல் சில போட்டிகளில் சரியாக எடுபடவில்லை. மற்றும் அஸ்ஹ்ரபுல், நந்தா, நேபியர் போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு அளித்திருக்கலாம். ஆரம்பம் நன்றாக இருந்த இவர்களின் முடிவு மோசமாக அமைந்து விட்டது.

பல சர்ச்சைகளுக்கு மத்தியில் விளையாடிய கல்கத்தா அணிக்கு இம்முறை ஏமாற்றமே மிஞ்சியது. பல திறைமையான வீரர்கள் இருந்தும் தோல்விகளையே தழுவினார்கள். பேசாமல் தலைமைப்பதவியை கங்குலிக்கு வழங்கியிருக்கலாம் என பலர் கூறினார்கள். இவர்களின் ஒரே ஆறுதல் கடைசி லீக் போட்டிகள் இரண்டிலும் வெற்றி பெற்றமை ஆகும். அது அவர்களின் அடுத்த வருட போட்டிகளுக்கு தயார் செய்திருக்கலாம்.

அடுத்து சாம்பியன் டெக்கன் சார்ஜர்ஸ் அணியினரை பார்ப்போம். கடந்த வருடம் மோசமாக செயல்பட்ட இந்த அணி இம்முறை வெகுவாக முன்னேறியது எனலாம். குறிப்பாக இந்த அணியில் விளையாடிய அனைத்து சர்வதேச வீரர்களும் சிறப்பாக செயல்பட்டனர். அடம் கில்கிறிஸ்ட் என்ற ஒரு அனுபவ மந்திரம் செய்த தலைமைத்துவம், அதிரடி ஆட்டம் மற்றும் கிப்ஸ், சைமன்ஸ் என்ற புயல்களின் வேகம் ஆகியவையும், ஆர் பி சிங்க், ஓஜா, சுமன் என்ற இளம் வீரர்களும் அணியின் வெற்றியை வழிவகுத்தனர். சமிந்த வாஸ் சில போட்டிகளில் பங்குபெற்று சிறப்பாக பந்து வீசினார். ஸ்காட் ஸ்டைரிஸ், ஸ்மித், எட்வர்ட்ஸ் போன்ற வீரர்களும் சிறப்பாக செயல்பட்டனர். லக்ஸ்மன் அவராகவே ஒதுங்கி இளைய வீரர்களுக்கு வாய்ப்பளித்து இருக்கலாம் என கருதப்படுகிறது. ரொஹித் சர்மாவின் துடுப்பாட்டம் அதிரவைத்தது..(ஐ பி எல் இல மட்டும் நல்லா அடியுங்க. இன்டர்நேஷனல் ல மட்டும் அடிக்கமாட்டீங்களே. எல்லா பந்துகளையும் தட்டி தட்டி அடிப்பீங்க)

அடுத்து பெங்களூர் அணி. கடந்தமுறை மந்தமாக செயல்பட்ட அணி இம்முறை இறுதிப்போட்டிக்கு தெரிவாகியது. ஆரம்பத்தில் பீட்டர்சனின் தலைமையில் பல சவால்களுக்கு மத்தியில் போராடிய அணி பின்னர் கும்ப்ளேயின் தலைமையில் சிறப்பாக செயல்பட்டது. ராபின் உத்தப்பாவை தவிர மற்ற வீரர்கள் அனைவரும் சிறப்பாக செயல்பட்டனர். அவர் மட்டும் ஏனோ தானோ என்று விளையாடினார். விராட் கொஹ்லி, பாண்டி ஆகியோருக்கு நல்ல எதிர்காலம் உண்டு. மற்றும் தென்னாபிரிக்காவின் வி டி மேர்வே புதிய அதிரடி வீரராக உருவாகியுள்ளார்.பிரவீன் குமார் சில இடங்களில் மெக் கிராத்தை நினைவுபடுத்துகிறார். ட்ராவிடின் ஆரம்ப கட்டம் நன்றாக இருந்தது, மற்றும் அரை இறுதி போட்டியில் சிறப்பாக செயல்பட்டார்.

பஞ்சாப் அணி வெற்றிகளை சந்தித்த அதே வேளையில் தோல்விகளையும் அதிகம் சந்தித்தது. யுவராஜ் சிங் இம்முறை 2 ஹட் ரிக் மற்றும் பல சிக்சர்கள் என கலக்கினார். அவருக்கு பலமாக சங்ககார, மஹேல, பிரெட் லீ, இர்பான் பதான், கடிச் என்ற அனுபவங்கள் இருந்தும் ஏதோ அரை இறுதிக்கு தகுதி பெறாமல் போனது. ஸ்ரீசாந்த் பல ஓட்டங்களை கொடுத்தார்..அதாவது பந்துவீச்சில்..அப்துல்லா அடுத்த தென்னாபிரிக்காவின் பந்துவீச்சு நட்சத்திரம் எனலாம்.

அடுத்து சென்னை அணி. ஆரம்பத்தில் சில தோல்விகளை கண்ட அணி, பின்னர் படிப்படியாக முன்னேறி அரையிறுதிக்கு முன்னேறியது. தோனி தலைமைத்துவத்தில் காட்டிய அக்கறையை துடுப்பாட்டத்திலும் கொஞ்சம் காட்டியிருந்தார். எனினும் சில போட்டிகளில் பிரகாசிக்க தவறினார். ஹெய்டேன் ஏன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாரோ தெரியவில்லை. இன்னும் விளையாடி இருக்கலாம்.. அவருடைய ஆட்டம் பிரமாதமாக இருந்தது. ரெய்னா ஒரு நட்சத்திரம். முரளி ஜகாடி என பந்துவீசும் ஓங்கியிருந்தது. பாலாஜி ரொம்பவே மெதுவாக பந்து வீசுகிறார். எனினும் ஒரு எதிர்காலம் உண்டு. ஜேகப் ஓரம் மற்றும் மோர்கெல் ஆகியோர் துடுப்பாட்டத்தில் பிரகாசித்து இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.சிறந்த களத்தடுப்பு வீரர்கள் நிறைந்த இந்த அணி இம்முறை களத்தடுப்பில் ரொம்பவே கோட்டை விட்டது. தோனியின் தலைமையில் அரை இறுதி வரை முன்னேறியது ஒரு சிறிய பெருமையே.

ராஜஸ்தான் அணி இம்முறை படு மந்தமாக செயல்பட்டது. ஷேன் வார்ன் என்ற ஒரு மந்திரவாதியின் மந்திரம் இம்முறை பலிக்கவில்லை. யுஸுப் பதான் சில போட்டிகளில் மட்டுமே பிரகாசித்தார். ஸ்மித் சரி வர விளையாடி இருக்கலாம். ஜடேஜா பரவாயில்லை. கடந்த வருடம் பல அபார வெற்றிகளை பெற்ற இந்த அணி..இம்முறை இறுதி நேரத்திலேயே வெற்றிகளை குவித்தது எனலாம்.

அடுத்து டெல்லி அணி, இவர்களை பற்றி சொல்ல தேவையில்லை. லீக் போட்டிகளில் திறமையாக விளையாடி அரையிறுதியில் தோல்வியை தழுவியது ஒரு சிறிய வருத்தமே. எ பி டி வில்லியர்ஸ், டில்ஷான், வார்னர் என அனைவரும் சிறப்பாக விளையாடினர். ஆரம்ப ஜோடி சேவாக் மற்றும் காம்பிர் இம்முறை சோபிக்க தவறினர். பந்துவீச்சில் மிஸ்ரா கலக்கினார், தினேஷ் கார்த்திக் மீண்டும் இந்திய அணிக்குள் நுழைய போராடுகிறார்.

ஆக இம்முறை போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாக இருந்து இருக்கலாம். சிலவேளை பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்து இருக்கலாம். அடுத்த வருடம் பொறுத்து இருந்து பாப்போம் யார் வெல்வார்கள் என..

Wednesday, April 22, 2009

எம் ஜி ஆர் மற்றும் ரஜினி..இரு துருவங்கள்..
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார்களாக திகழ்ந்த இருவர் எம் ஜி ஆர் மற்றும் ரஜினிகாந்த்.
இவர்கள் இருவரின் அளவிற்கு வேறு எந்த தமிழ் நடிகர்களுக்கும் ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் இருக்கவில்லை எனலாம். இன்று "மக்கள் திலகம் எம் ஜி ஆர்" அவர்கள் உயிருடன் இல்லாவிடிலும் பல மக்களின் மனதில் உயிருடன் குடிகொண்டு இருக்கிறார். மற்றும் அவருடைய பாடல்கள் இன்றும் மீண்டும் மீண்டும் கேட்கத்தோன்றும்.


ஆரம்பத்தில் சிறு சிறு வேடங்களில் நடித்த எம் ஜி ஆர் பிற்காலத்தில் தமிழ் சினிமாவின் சரித்திரத்தில் இடம்பெறுவார் என யாரும் நினைத்து இருக்கமாட்டார்கள். 1936 இல் சதி லீலாவதி என்ற படத்தில் நடித்தார். ஆனால் பிறகு வந்த "ராஜகுமாரி" திரைப்படத்திற்கு பிறகு தொடர்ச்சியான 25 வருடங்களுக்கு தமிழ் திரைப்பட உலகில் ஒரு "நட்சத்திரமாக" திகழ்ந்தார். இவரை நம்பி படம் எடுத்த பலருக்கு இலாபமே கிடைத்தது. இவர் நடித்த படங்களில் "நாடோடி மன்னன், மலைக்கள்ளன், எங்க வீட்டு பிள்ளை, ஒளிவிளக்கு" ஆகிய படங்கள் பலரால் மறக்க முடியாதவை. மற்றும் இவரை இன்னும் தூக்கி நிறுத்திய விடயங்கள் என்றால் அதில் முக்கியமான முதலாவது விடயம் இவரது திரைப்பட பாடல்கள். இவரது புரட்சி பாடல்கள் எப்போதும் அழியாதவை. மற்றும் இவரது சண்டைக்காட்சிகள் புகழ் பெற்றவை, பல சண்டைக்காட்சிகளை இவரே "டூப்" இல்லாமல் செய்ய முயற்சிப்பார்.

முதலமைச்சர் ஆக முன்னமே இவர் பல மக்களுக்கு உதவி செய்தார். அதுவே இவரை அரசியல் ஆசனத்தில் அமரவைத்தது. அதிகமாக மக்களுடன் கோபம் கொள்ள விரும்ப மாட்டார்.

இவருடைய பாடல்களில் "நான் ஆணையிட்டால்" பாடல் இன்னும் என்னை கவர்ந்த ஒன்று.

தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் குணசித்ர மற்றும் வில்லன் வேடங்களில் நடிக்கதொடங்கி பின்னர் சூப்பர் ஸ்டார் என்ற நிலைக்கு முன்னேறிய நடிகர் ரஜினிகாந்த்.

"பைரவி, பில்லா, முரட்டுக்காளை, பிரியா" போன்ற படங்கள் இவரை உச்ச நட்சத்திரமாக மாற்றியது.

எம் ஜி ஆர் க்கு பிறகு அதிக ரசிகர்களை கொண்ட நடிகர் இவர் என்றால் அது மிகையாகாது.
எம் ஜி ஆரைப்போலவே இவருடைய படப்பாடல்களும் பிரபலமானவை. மற்றும் தமிழ் சினிமாவின் முதல் "ஸ்டைல்" நாயகனும் இவர்தான், "சிகரட்"டை ஸ்டைலாக புகைப்பது அதில் முக்கியமான ஒன்று. மற்றும் நகைச்சுவை காட்சிகளில் திறமையானவராக இருந்தார். "தில்லு முள்ளு" படம் சூப்பர் ஹிட் ஆனது பலரின் நினைவில் இருக்கலாம். ஆனால் இவர் எம் ஜி ஆரை போல் சண்டை காட்சிகளில் அதிகம் சிரம் எடுக்க விரும்பமாட்டார். ஆனால் "அண்ணாமலை, ரங்கா, வீரா, பாட்ஷா" போன்ற படங்களில் சிறப்பாக சண்டை செய்தார்.

மற்றும் இவருடைய ரசிகர்கள் வீட்டு சாமி அறையில் இவரும் ஒரு "கடவுள்" ஆக இருக்கிறார். எம் ஜி ஆரைப்போலவே இவரும் பல மக்களுக்கு உதவி செய்தார் எனலாம்.

அரசியல் விடயங்களை தவிர இவர்கள் இருவரும் கிட்டதட்ட ஒரே மாதிரியான குணங்களை கொண்டவர்கள்.

என்னை பொறுத்தவரை இவர்களுக்கு பிறகு வேறு யாரும் "சூப்பர் ஸ்டார்"களாக வலம் வரமுடியாது.

Sunday, April 19, 2009

இவர்கள் இருவரும் விலகிவிட்டால் கிரிக்கெட் உலகில் அதைவிட சோகம் வேறெதுவும் இருக்காது ..


"கிரிக்கெட்" ஒரு சிறந்த விளையாட்டு. ஆரம்பத்தில் ஒரு சில நாடுகளில் மட்டும் விளையாடப்பட்ட இது பிற்காலத்தில் உலகில் பல நாடுகளில் பரவியது.

ஒரு சில கிரிக்கெட் வீரர்கள் மக்கள் மனதில் நிறைந்து இருப்பார்கள். அவர்கள் ஓய்வு பெற்றால் அவர்களுக்காக கண்ணீர் வடிப்பார்கள். அன்றைய "பிரட்மன்" இல் இருந்து இன்றைய "கங்குலி" வரை அது நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது.

என்னதான் ஆஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகள் வலுவாக இருந்தாலும், நம்ம ஆசிய கிரிக்கெட் வீரர்களுக்கு எப்பவுமே கிராக்கி அதிகம்தான்.
மியாண்டட், இம்ரான் கான், கபில் தேவ், கவாஸ்கர், ரணதுங்க, அரவிந்த, கங்குலி, ரவி சாஸ்த்ரி, கும்ப்ளே, வாசிம் அக்ரம் என பல வீரர்கள் ஆசிய சரித்திர நாயகர்களாக இருந்து ஓய்வு பெற்றவர்கள். இவர்களின் ஓய்வால் நிச்சயம் இவர்களது ரசிகர்கள் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்பது திண்ணம்.

எங்கள் ஹீரோக்களை பார்த்து (ஆசியர்) மற்றைய கண்ட வீரர்கள் பொறாமைப்பட்டதும் உண்டு.

தற்போது விளையாடும் வீரர்களில் நீண்ட காலமாக விளையாடி வரும் வீரர்கள் என்றால் அது இலங்கையின் ஜெயசூரிய மற்றும் இந்தியாவின் டெண்டுல்கர் என கூறலாம். (இவர்களுக்குப்பின்தான் முரளி, டிராவிட் ஆகியோர் வந்தனர் எனலாம்)

கிரிக்கெட்டில் இவர்கள் இருவரும் சம அளவிலான சாதனைகளை வைத்துள்ளனர் எனலாம். மற்றும் விளையாட்டுக்கு அப்பால் இவர்கள் இருவரும் உயிர் நண்பர்களாக இருந்து வருகின்றனர் எனலாம். (ஐ பி எல் மும்பை இந்திய அணியில் ஜயசூரியவை சச்சின்தான் இணைத்தார் என்று பல தகவல்கள் வெளியாகின. சந்தோசம்தான். இரண்டு சிங்கங்கள் ஒரே அணியில் விளையாடுவது பெருமையே..)

ஒரு காலத்தில் பலவீனமான அணிகளில் ஒன்றாக இலங்கை அணி கருதப்பட்டது. ஆனால் 1996 உலக கிண்ணத்தை கைப்பற்றி பலரின் வாயை அடைக்கச் செய்தது. அதை வென்றமைக்கு மிக முக்கியமானவர்களுள் ஜெயசூரியவும் ஒருவர். மற்றும் அத்தொடரின் சிறந்த நாயகன் விருதையும் வென்றார்.அதிரடி ஆட்டம் என்றால் உடனே நினைவுக்கு வருபவர் ஜெயசூரியவே.

மற்றும் பல போட்டிகளில் சிறப்பான முறையில் பந்துவீசும் செய்து இருக்கிறார்.
இவருடைய சிக்ஸர்கள் பலரால் பேசப்பட்டவை. அந்நாட்களில் (1996-2000 போன்ற காலப்பகுதிகளில்) டெண்டுல்கர் 4 ஓட்டங்களுக்கும் ஜெயசூரிய 6 ஓட்டங்களுக்கும் பிரபலமாகவிருந்தனர். ஏன் இப்போதும் கூட இவர்கள்தான் ஞாபகத்தில் இருப்பர்.

இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக மிளிர்பவர் டெண்டுல்கர். இவர் அளவிற்கு இந்தியாவில் வேறெந்த கிரிக்கெட் வீரருக்கும் ரசிகர் இருக்கவில்லை. (தற்போது தோனி அதை மிஞ்சுவார் என்று தெரிகிறது.)

1997 - 1998 காலப்பகுதிகளில் ஆஸ்திரேலியாவுடன் வெற்றி பெறுவது கஷ்டமான விடயம் என்ற ரசிகர்களின் எண்ணங்களை மாற்றி அமைத்தவர் என சச்சினை கூறலாம். குறிப்பாக 1998 ஷார்ஜா கிண்ணத்தை தனது செஞ்சுரிகள் மூலம் பெற்றுக்கொடுத்தார். மற்றும் இவருடைய கவர்ச்சியான "ஷாட்"கள் பல ரசிகர்களை கவர்ந்தன. அணி நிலைமைக்கேற்ப இவருடைய ஆட்டம் இருக்கும்.

தற்போது "மும்பை இந்தியன்ஸ்" அணியில் இவர்கள் இருவரும் ஒன்றாக விளையாடி வருகின்றனர். மற்றும் ஐ பி எல் தொடரின் "சிறந்த ஆரம்ப ஜோடி" என்றால் நிச்சயம் இவர்கள் இருவரும்தான் (சேவாக் மற்றும் காம்பிர் இருவரும் புது ஜோடிதானே..ஆக இப்போதைக்கு இது வேண்டாம்)

இவர்கள் இன்னும் சில வருடங்களில் ஓய்வு பெற்று விடுவார்கள். இவர்களுடைய ஓய்வு நிச்சயம் கிரிக்கெட் உலகில் பாதிப்பை ஏற்படுத்தும். பாதிப்பு கிரிக்கெட் உலகில் மட்டும் அல்ல ரசிகர்களின் மனதிலும்தான்.

நன்றி...

Saturday, April 18, 2009

அஜித் - ஒரு புரிந்துகொள்ள முடியாத நல்ல கதாபாத்திரம்..
உலகில் வெளிப்படையான கருத்துகள், உணர்ச்சிவசப்படுதல் போன்ற குணங்கள் நிறைந்த பிரபலங்களுக்கு எதிராகவும் ஆதரவாகவும் குரலிடுவோர் பலர் உள்ளனர். இந்தியாவில் எடுத்துகொண்டால் முன்னால் கிரிக்கெட் வீரர் சௌரவ் கங்குலி மற்றும் தமிழ் நடிகர் அஜித்குமார்..பல எதிர்ப்புகள் மற்றும் பாராட்டுக்களுக்கிடையில் இவர்கள் சாதித்து இருப்பது ஆச்சர்யமான ஒன்றுதான்.

தமிழ் சினிமா வரலாற்றில் பல எதிரிகளையும் அதற்கு நிகராக பல ரசிகர்களையும் வைத்திருக்கும் ஒரு நடிகர் யார் என்றால் சிறு குழந்தை கூட சரியாக பதில் சொல்லும்..
அது வேறு யாரும் அல்ல...அஜித்..

இவருடைய குணங்களுக்கு விரோதமாக இருக்கும் மக்கள் பலர். அதே போல் இவருடைய குணங்களை பார்த்து இவருக்கு ரசிகர்களான மக்களும் மிகவும் பலர்.

முள் பாதையில் தன் வெற்றி கொடியினை "தன்னம்பிக்கை" என்ற ஒரு சொல்லினால் நாட்டிவருபவர். அதிகம் அலட்டிக்கொள்ளாத ஒரு நடிகர் என பல ஊடகங்கள் இவரை புகழ்ந்துள்ளன. வெளிப்படையாக பேசக்கூடியவர் என்றும் பல ஊடகங்கள் இவரை கூறிவந்துள்ளன.

சினிமாவில் அறிமுகமான வேளையில் ஒரு மிகப்பெரிய வாகன விபத்தில் சிக்கினார்.
"இவருடைய காலம் இனிமேல் சரிதான்" என்று கூறி சில நாட்களுக்குள் யாரும் எதிர்பாரா விதமாக சரிவிலிருந்து மீண்டு வந்தார். மீண்டவுடன் "காதல் கோட்டை" "ஆசை" ஆகிய சூப்பர் ஹிட் படங்களும், "உல்லாசம்" "பவித்ரா" என்ற சுமாரான படங்களும் தந்து இளம் நடிகர்களில் சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார்.

அதன் பிறகு "காதல் மன்னன்" என்ற வெற்றிப்படத்தை தந்தார். அருமையான திரைக்கதையினால் அப்படம் வெற்றி பெற்றது. அதன் பிறகு "வாலி" "அமர்க்களம்" "ஆனந்த பூங்காற்றே" "முகவரி" "கண்டுகொண்டேன்" ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் நான் ஒரு நட்சத்திர நடிகர் என்பதை நிரூபித்து காட்டினார்.

"இலகுவில் நட்பு வைத்துக்கொள்ள விரும்பாத ஒரு நடிகர்" என்ற ஒரு பெயர் இவருக்கு சில சினிமா புள்ளிகளால் வழங்கப்பட்டிருந்தது.

அதன் பிறகு இவர் நடித்த "தீனா" "சிட்டிசன்" ஆகிய படங்கள் 2001 ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகருக்கான விருதை வாங்கித்தந்தது. தொடர்ச்சியாக சில சுமாரான படங்களாக "பூவெல்லாம் உன் வாசம்" "ரெட்" ஆகியன வெளிவந்தன. தொடர்ந்து வந்த "ராஜா" தோல்வியை தழுவியது.

அதன் பிறகு வந்த "வில்லன்" திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது.

அதன் பிறகுதான் பல சிக்கல்கள் இவருக்கு உருவாகின. நான்தான் அடுத்த சூப்பர் ஸ்டார், அதனை "ஆஞ்சநேயா" படம் நிரூபிக்கும் என்று கூறினார். இந்த கருத்து பலரிடையே சர்ச்சையை ஏற்படுத்தியது. மற்றும் ஆஞ்சநேயா படமும் தோல்வியடைந்தது. அதன் பிறகு வந்த "ஜனா" அவர் வரலாற்றில் மிகப்பெரிய தோல்வியை தந்தது. மற்றும் சக நடிகர்களுடன் அவரை ஒப்பிட்டு வேறுபடுத்தி பார்த்ததால், குறிப்பாக விஜய்யுடன் அவரை போட்டியாக வைத்து பார்த்ததால் அவருக்கு பல எதிர் ரசிகர்கள் உருவாகினர் (அன்றைய சிவாஜி- எம் ஜி ஆர், கமல் - ரஜினி கூட்டணிகளுக்குள் இவ்வாறான ஒரு பிரச்சினைகள் உருவானதில்லை)

மற்றும் எளிதில் அவர் உணர்ச்சி வசப்பட்டு பேசிய வார்த்தைகள் பல சர்ச்சைகளை தோற்றுவித்தன. விழாக்களுக்கு சமூகமளிக்காமை, எதையும் கண்டுகொள்ளாமை என்று பலரால் விமர்சிக்கப்பட்டார். மற்றும் சத்தமில்லாமல் உதவி செய்தல் தனது ரசிகர் மன்றத்தை "நற்பணி மன்றமாக" மாற்றியமை ஆகியவற்றால் பலரிடமிருந்து புகழ் வந்து சேர்ந்தன.

தொடர்ந்து வந்த "அட்டகாசம்" திரைப்படம் வெற்றிபெற்றது, ஆனாலும் அடுத்து வந்த "ஜி" தோல்வியடைந்தது. தொடர்ந்து நடித்த "பரமசிவன்" ஓரளவு பெயரை வாங்கித்தந்தது. மற்றும் "திருப்பதி" சுமாராகவே ஓடியது. பின்னர் வந்த "வரலாறு" அவரை மீண்டும் உயர்நிலைக்கு அடைய உதவியது, அதன் பிறகு வந்த "கிரீடம்" ஹிட் ஆனது. ஆனால் "பில்லா" என்ற ரீமேக் படம் அவரை மீண்டும் சிகரத்தை அடைய உதவியது. ரஜினி படங்களுக்கு போட்டியாக வசூலை அள்ளித்தந்தது.மற்றும் சக நடிகர்களுடன் நட்புடன் பழகியமை, விழாக்களுக்கு சமூகமளித்தமை ஆகியவை இவருக்கு நல்ல பெயரை அள்ளித்தந்தன. இறுதியாக வந்த ஏகன் பெரிதாக ஓடவில்லை. அதாவது "சுமார்" ரகமே. மற்றும் "ஈழ தமிழர்களுக்காக நான் ஏன் உண்ணாவிரதம் இருக்க வேண்டும்" என்று இவர் கூறியதாக சர்ச்சைகள் எழுந்தன. அதனை அவர் மறுத்தார்.

தற்போது அவருடைய பிறந்தநாள் விழாக்களை கொண்டாட வேண்டாம் என்றும் "இலங்கை தமிழர்கள்" கஷ்டப்படும் வேளையில் நான் பிறந்தநாள் கொண்டாடுவது உகந்ததல்ல என்று கூறி பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என்று ரசிகர்களுக்கு அன்பான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தற்போது உள்ள இளம் நடிகர்கள் பலர் இவரை ஒரு ரோல் மொடேலாக வைத்திருக்கின்றனர். குறிப்பாக ஆர்யா, சிம்பு, நகுல், ரவி போன்றோர் ஆவர். இவற்றில் சிம்புவும் ஆர்யாவும் குறிப்பிடத்தக்கவர்கள்.

இவருடைய முன்னேற்ற பாதைகள் விரும்பாமல் இவரை திட்டி தீர்ப்போர் பலர் உள்ளனர். அப்படியிருந்தும் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்துடன் நிலையான இடத்தில் இருப்பது ஒரு ஆச்சரியமான விடயமே.

இப்படி ஒரு கடின வாழ்க்கையை தாண்டி முன்னேறிய இவரை திட்டுவதற்கு மற்றவர்களுக்கும் தகுதி இருக்க வேண்டும்.

எனது இறுதி கருத்து "சினிமா என்பது திட்டி தீர்ப்பதற்கு உருவானதல்ல.."

Thursday, April 16, 2009

வாரணம் ஆயிரம்..மீண்டும் என் பார்வையில்..என்னதான் "அயன்" திரைப்படம் வெளிவந்தாலும், பலரின் மனதில் குறிப்பாக இளைஞர்கள் மனதில் "வாரணம் ஆயிரம்" படம் இன்னும் ஓடிக்கொண்டு இருக்கிறது..
குறிப்பாக படப்பாடல்கள் இன்னும் பலரின் வாயில் முணுமுணுக்கப்படுகிறது. நான் மீண்டும் அந்த திரைப்படத்தைப்பார்த்தேன். உண்மையில் கௌதம் மேனன் ரசித்து ரசித்து கதையை செதுக்கியுள்ளார் என்று கூறலாம்.

காதல் திருமணம் செய்த கிருஷ்ணன் மற்றும் மாலினிக்கு மகனாக சூர்யா. தன் அப்பாவை ரோல் மொடேலாக நினைத்து வளர்பவன். அப்பாவின் செல்லம். ஆரம்பம் முதல் தன் குடும்பம் மற்றும் தங்கையுடன் சந்தோசமாக வாழ்கிறான். இளமைக்காலத்தை அப்பாவின் சொல் தட்டாமல் அதே நேரம் மிகவும் ஜாலியாக கொண்டாடுகிறான். காலேஜ் இல் படிப்பதற்காக முதன் முதலாக தன் குடும்பத்திலிருந்து பிரிந்து காலேஜ் விடுதியில் தங்கி படிக்கிறான்.

காலேஜ் வாழ்க்கை முடிந்து வீடு வரும் வழியில் ஒரு பெண்ணின் மேல் காதல் கொள்கிறான். (கண்டதும் காதல்) அவளிடம் உடனே தன் காதலை கூறுகிறான். அவள் உடனே சம்மதிக்க மறுக்கிறாள். சில நாட்களின் பின் அவள் வீட்டுக்கே சென்று காதலை கூறுகிறான். அவள் அமெரிக்க சென்று படிக்கப்போவதாக கூறுகிறாள். தன் தந்தையின் அனுமதியுடன் அமெரிக்க செல்வதற்கும் திட்டமிடுகிறான். இடைப்பட்ட காலத்தில் "அப்பாவின் சுகயீனம், ப்ராஜெக்ட் வெற்றி" ஆகியவை அவன் வாழ்க்கையில் வந்து போகின்றன. அதன் பின் மீண்டும் "காதல்" பற்றி சிந்திக்கிறான். அமெரிக்காவிற்கும் பயணமாகிறான்.

அங்கு சென்று காதலியை சந்தித்து அவளிடமிருந்து சம்மதமும் வாங்கிக்கொள்கிறான். என்ன துரதிர்ஷ்டம் காதலிக்க ஆரம்பித்து இரண்டே நாட்களில் காதலி குண்டு வெடிப்பில் உயிரிழக்கிறாள். மனக்கவலையுடன் மீண்டும் வீட்டுக்கே (இந்தியா) வருகிறான், அவனால் காதலியை மறக்கமுடியவில்லை. இங்கு வந்து குடிப்பழக்கத்துக்கு அடிமையாகிறான். அவன் தந்தையின் அன்பான ஆணையால் காஷ்மீர் செல்கிறான். அங்கு தீவிரவாதிகளிடமிருந்து ஒரு பிள்ளையை காப்பாற்றுகிறான். மற்றும் குடிப்பழக்கமும் இல்லாமல் போகிறது. மீண்டும் அவன் வாழ்கையில் ஒரு வசந்தம் வந்தது போல் உணர்கிறான்.

தந்தையின் அனுமதியுடன் அவன் விருப்பப்பட்ட இந்திய இராணுவத்தில் சேர்கிறான், சேர்ந்து 6 வருடங்களில் உயரதிகாரி ஆகிறான். தன் தங்கையின் நண்பியின் காதலை ஏற்றுக்கொள்கிறான். இருவரின் வாழ்க்கையும் சந்தோசமாக போகிறது. இந்நேரத்தில் அவன் அப்பாவிற்கு மீண்டும் சுகயீனம் வருகிறது. அவன் இராணுவ கடமைக்கு சென்ற வேளையில் அவன் அப்பா உயிரிறக்கிறார். மீண்டும் அவனுக்குள் கவலைகள் வந்து உருவெடுக்கின்றன. "இன்னும் அப்பா எங்களுடன்தான் இருக்கிறார்" என்ற அம்மாவின் கருத்துடன். கதை சுபம்.

வித்தியாசமான கதை... "ஆட்டோகிராப்" "தவமாய் தவமிருந்து" "வெயில்" "கிரீடம்" போன்ற நல்ல கதையம்சம் உள்ள படங்களில் இதுவும் இணைந்துள்ளது.

இரட்டை வேடங்களில் சூர்யா அசத்தியுள்ளார். அதுவும் முதன் முதலாக பிரியும் வேளையில் தந்தை கல்லூரிக்கு மகனை வழியனுப்பும் போது மகன் சூர்யா கண்களில் இருந்து வரும் கண்ணீர், எங்கள் கண்களிலிருந்தும் கண்ணீரை வரவழைக்கிறது.
படத்தில் உள்ள அனைத்து முகமாற்றங்களும் (makeup) சூர்யாவிற்கு பொருந்தியிருக்கிறது.
காதலை இழந்து தவிர்க்கும் வேளையில் சூர்யாவின் நடிப்பு இன்னும் அருமை.

அம்மா வேடத்தில் வரும் சிம்ரன் அழகாக நடித்து இருக்கிறார்.

இன்னுமொரு பலம் தமிழிற்கு புதுவரவு "சமீரா ரெட்டி"..இந்த படத்தின் பின் பலருடைய மனதில் கனவுக்கன்னியாக இருக்கிறார். "நெஞ்சுக்குள் பெய்திடும்" பாடலுக்கு அவருடைய முகபாவனை அழகு.

திவ்யாவிற்கு ஆரம்பத்தில் பெரிதாக வாய்ப்பு இல்லை என்றாலும் இறுதியில் காதலை வெளிப்படுத்தும் நேரங்களில் அழகாக நடித்துள்ளார்.

என்ன இருந்தாலும் படத்தின் மிகப்பெரிய பலம் (பலமோ பலம்) படத்தின் பாடல்கள். (ஹரிஷ் அண்ணா..எப்படி உங்களால மட்டும்) ஹரிஷ் ஜெயராஜ் - கௌதம் கூட்டணி மீண்டும் ஜொலித்துள்ளது. "முன்தினம் பார்த்தேன்" "நெஞ்சுக்குள் பெய்திடும்" "அஞ்சல"
பாடல்கள் மீண்டும் மீண்டும் கேட்கத்தூண்டுகின்றன. "அடியே கொல்லுதே" பாடலுக்கு சூர்யாவின் நடனம் பிரமாதம். "ஏத்தி ஏத்தி" பாடல் அப்பாவியாய் இருந்து முன்னேறிய இளைஞர்களுக்கு ஒரு "தேசிய கீதம்".

ரத்னவேலுவின் ஒளிப்பதிவு பிரமாதம்.

ஒரு தந்தைக்கும் மகனுக்கும் உள்ள ஆழமான புரிந்துணர்வு மிக அழகாக சித்தரிக்கப்பட்டுள்ளது.

Wednesday, April 15, 2009

ஐக்கிய இராச்சியத்தில் கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு ஒரு வேண்டுகோள்..


இலங்கை மாணவர்களே உங்கள் நலனுக்காக நான் எழுதிக்கொள்வது..

இன்றைய காலகட்டத்தில் வெளிநாடுகளில், அதுவும் குறிப்பாக ஐக்கிய இராச்சியம், ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளில் கல்வி பயில விரும்பும் மாணவர்கள் அதிகம்.
( இதுதானே புது ஸ்டைல்..) அப்படி அவர்களின் ஆசைகள் உருவாக வேண்டும்தான். (ஒரே நாட்டுக்குள்ள இருந்து என்னதான் செய்யுறது)

அதிலும் ஐக்கிய இராச்சியம் மாணவர்களின் கனவு மையமாக திகழ்கிறது.

ஆனால் தற்போது ஐக்கிய இராச்சியத்தில் உள்ள மாணவர் விசா மூலம் கல்வி பயில சென்ற மாணவர்கள் பலர் மிகவும் கஷ்டப்படுவதாக தெரிகின்றது, குறிப்பாக அங்கு பகுதி நேர வேலை வாய்ப்புகளை பெறுவது மிகவும் கஷ்டமாக இருப்பதாக தெரிவிக்கின்றனர்.

உலக பொருளாதார வீழ்ச்சி இதற்கு முக்கிய காரணம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. ஆக இப்போது உள்ள சூழ்நிலையில் அங்கு கல்வி கற்பதும் கடினம் என தெரிவிக்கப்படுகின்றது, "என்னால் முடியும்" என்று கூவலிட்டு அங்கு போய் கஷ்டப்பட்டவர்கள் கஷ்டப்படுகின்றவர்கள் மிக மிக அதிகம். குறிப்பாக உறவினர்கள், சகோதரர்கள் மற்றும் நண்பர்களின் பிழையான தகவல்களால் அங்கு போய் கஷ்டப்படும் மாணவர்களின் நிலைமையைப்பார்க்க எனக்கு மிகவும் கவலையாக இருக்கிறது. நல்ல செல்வாக்கான மாணவர்களுக்கு அவை பெரிய பிரச்சினையாக தெரியாது, ஆனால் இங்கு நன்று கஷ்டப்பட்டு வாழ்ந்த மாணவர்கள் அங்கும் போய் கஷ்டப்பட்டால் எப்படி இருக்கும்..

இந்த வருடம் செப்டெம்பரில் அங்குள்ள பல்கலைக்கழகங்களில் புதிய பாடங்கள் (courses) ஆரம்பிக்கப்படவிருக்கின்றன.எப்படியும் அடுத்த intake இல் பல மாணவர்கள் செல்வார்கள் என்பது உறுதி, ஆதலால் இங்கு உள்ள நடுத்தர மாணவர்கள் சற்று சிந்தித்து செயல் படுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

விஜயும் அஜித்தும்.. ஒரு பார்வை..


"இளையதளபதி", "டாக்டர்" என்ற பெயர்களுடன் ரசிகர்களால் அழைக்கப்படும் விஜய்க்கும், "ஆசை நாயகன்" "தல" மற்றும் "அல்டிமேட் ஸ்டார்" என்று அழைக்கப்படும் அஜித்திற்கும் எப்போதும் ஒரு போட்டி இருந்து வருகிறது.

எம் ஜி ஆர் - சிவாஜி, ரஜினி - கமல் என்ற தலைமுறைக்கு பிறகு தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு தலைமுறை என்றால் அது விஜய் - அஜித் என்றுதான் இருக்கும். சிவாஜி நடிப்பில் திறமையை நிருபித்தார்..ஆனால் எம் ஜி ஆர் தன் ஸ்டைல் மற்றும் புரட்சி பாடல்கள் மூலம் அதிகளவு ரசிகர்களை சேகரித்தார். அவருடைய அரசியல் வெற்றிகள் அதை இன்னும் நிருபிக்கும். இதே விடயம் ரஜினிக்கும் பொருந்தும்..(அரசியல் தவிர்த்து உற்று நோக்கினால் எம் ஜி ஆர் மற்றும் ரஜினி இவருடைய மனப்பான்மைகளும் ஒரே மாதிரி இருக்கும்.)

ஆனால் விஜய் மற்றும் அஜித்திற்கு சம அளவில் ரசிகர்கள் உள்ளனர். இலங்கையில் விஜய்க்கு அதிகம் ரசிகர் பட்டாளம் உண்டு (கில்லி படம் இலங்கையில் வெற்றிகரமாக ஓடியது), மற்றும் மலேசியா மற்றும் சிங்கப்பூர் என்று பார்த்தால் அஜித்திற்கு செல்வாக்கு அதிகமாக இருக்கும் (பில்லா மற்றும் வரலாறு படங்கள் அங்கு சிறப்பாக ஓடியமை இதற்கு உதாரணம்)

ஆரம்ப கட்டத்தில் விஜயைவிட அஜித்திற்கு கொஞ்சம் ரசிகர்கள் அதிகம் இருந்தனர்.
குறிப்பாக வாலி, முகவரி, தீனா, சிட்டிசன் மற்றும் வில்லன் ஆகிய படங்கள் அதற்கு சான்றாக இருந்தன.. "வில்லன்" படம் வரும்வரை அஜித்தின் செல்வாக்கு சற்று ஓங்கியிருந்தது. மற்றும் உணர்ச்சிவசமான முகத்துடன் சண்டை பிடிக்கும் திறமை அஜித்திடம் அதிகம் காணப்பட்டது. மற்றும் அதிகம் பேசாமை, அவரிடம் காணப்படும் அமைதி என்பன ரசிகர்களின் மனதில் நிலையான இடம் பிடித்தன.

ஆனால் "திருமலை" "கில்லி" "திருப்பாச்சி" ஆகிய படங்கள் விஜயை மாபெரும் சிகரத்தில் வைத்தன..அதிலும் "கில்லி" விஜய்க்கு ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தியது. மற்றும் "திருமலை" படத்தில் அவர் பேசிய வசனங்கள் அஜித்தை குறை காட்டுவதாக பலர் விசனம் செய்தனர். எனினும் அந்த பிரச்சினை உடனே ஓய்ந்தது. ஆனால் ரசிகர்களின் மனதில் இருந்து அது ஓயவில்லை. மற்றும் இந்த படங்களில் வரும் நகைச்சுவை, நடனம், பாடல்கள் ஆகியன விஜய்க்கு புகழை சேர்த்தன.

அந்த நேரம் அஜித் கார் ரேசில் மிகவும் ஆர்வமாக இருந்தார். அதனால் அவரால் சினிமாவில் கவனம் செலுத்தவில்லை, அதனால்தான் அவரது சினிமா பயணம் முன்னேற்றம் காணாமல் இருந்தது என்று இன்றும் பலர் கூறுகின்றனர். மற்றும் அவரது வெளிப்படையான கருத்துகள் ஒரு சிலர் மத்தியில் கோபத்தை உண்டாக்கின.(இப்போது விஜயின் நிலையும் கிட்டதட்ட அதே போல்தான் உள்ளது "ஏய்..சைலென்ஸ்")

"ஆஞ்சநேயா" "ஜனா" ஆகிய படங்கள் அஜித்திற்கு படுதோல்வியை தந்தன. ஆனால் "அட்டகாசம்" அஜித்திற்கு ஓரளவு நல்ல பெயரை அளித்தது. தொடர்ந்து வெளியான "ஜி" படம் எதிர்பார்த்த அளவு ஓடவில்லை.

இந்த நிலைமையில் விஜய்க்கு ரசிகர் பட்டாளம் அதிகம் உருவானது.

தொடர்ந்து இவர்கள் நடித்து ஒரே சமயம் வெளியான "ஆதி" மற்றும் "பரமசிவன்" ஆகிய படங்கள் 2006 பொங்கல் தினத்தன்று வெளிவந்தன. அதிலும் அஜித்தின் "பரமசிவன்" அதிகம் கண்டுகொள்ளப்பட்டது. காரணம் அவர் தன் உடலை மிகவும் குறைத்து நடித்த படம் என்பதால் ஆகும். ஆனால் விஜயின் "ஆதி" எதிர்பார்த்த அளவு ஓடவில்லை. ஆனால் பரமசிவன் அஜித்திற்கு நல்ல பெயரை வாங்கி தந்தது. குறிப்பாக படத்தின் கடைசியில் வரும் "பைக் சேஸ்" காட்சி, அவர் ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமைந்தது. தொடர்ந்து அஜித் நடித்த "திருப்பதி" அஜித் ரசிகர்களால் மட்டுமே வரவேற்கப்பட்டது (விடயம் புரிந்ததா?).. ஆனால் அவர் 3 வேடங்களில் நடித்த "வரலாறு" மெகா ஹிட் ஆனது. படத்தின் பாடல்கள் மக்களால் அதிகம் கேட்கப்பட்டன (வேற யாரு நம்ம ஆஸ்கார் நாயகன் இசைதான்). "பெண்" நளின வேடத்தில் வரும் அஜித்தின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. இதனால் அந்த ஆண்டின் சிறந்த நடிகருக்கான "பிலிம் பேர்" விருதை அஜித் தட்டி சென்றார்.

அதனால் 4 வருட போராட்டத்தின் பின் அஜித் மீண்டும் தன்னை சிகரத்தில் வைத்தார். ("தல"க்கு தன்னம்பிக்கை அதிகம் என விஜய் ஒரு பேட்டியில் குறிப்பிட்டு இருக்கிறார்.)
2007 இல் ஒரே சமயம் "போக்கிரி" மற்றும் "ஆழ்வார்" ஆகிய படங்கள் வெளிவந்தன. ஆனால் "ஆழ்வார்" பெரிதாக ஓடவில்லை. ஆனால் விஜயின் "போக்கிரி" மாபெரும் வெற்றி பெற்றது, படத்தின் பாடல்கள், நகைச்சுவை ஆகியன பெரிதும் விரும்பப்பட்டன.
அதன் பிறகு அஜித்தின் "கிரீடம்" அவருக்கு கதை ரீதியாக நல்ல பெயரை வாங்கித்தந்தது.

விஜயின் "அழகிய தமிழ் மகன்" சுமாராகவே ஓடியது, ஆனால் அஜித்தின் "பில்லா" அவர் வரலாற்றில் ஒரு மைல் கல்லாக அமைந்தது, படத்தின் பாடல்கள், சண்டைகாட்சிகள், அஜித்தின் ஸ்டைல் ஆகியன படத்திற்கு மேலும் மெருகூட்டின..
அதன் பிறகு விஜயின் "குருவி" சுமார் ரகமாகவே ஓடியது. மற்றும் அஜித்தின் "ஏகன்" பெரிதாக ஓடவில்லை. இலங்கை தமிழர்களை பற்றி அவதூறாக கூறியதாக சில நாடுகளில் இத்திரைப்படம் திரையிடப்படவில்லை. தற்போது விஜய் நடித்து வெளிவந்தது உள்ள "வில்லு" திரைப்படத்திற்கு தற்போது பல விசனங்கள் வந்த வண்ணம் உள்ளன. ஆக மொத்தத்தில் இந்த இருவருடைய பாதையும் ஒரே மாதிரித்தான் உள்ளன..

தற்போது சூர்யா, விக்ரம், தனுஷ், விஷால், பரத், ஜெயம் ரவி ஆகியோர் முன்னணி நடிகர்களாக வலம் வந்தாலும், இந்த விஜய் - அஜித் கூட்டணிக்குத்தான் எப்போதும் ஒரு விறுவிறுப்பு காணப்படும்.

Tuesday, April 14, 2009

வரும் 20 20 உலகக்கிண்ண போட்டிகள் எப்படி இருக்கப்போகின்றன (தொடர்ச்சி)ஒரு கட்டத்தில் இரண்டு பந்துகள் மீதமிருக்க ஒரே ஒரு ஓட்டம் பெறவேண்டிய நிலையில் பாகிஸ்தான் அணி இருந்தது. எனினும் ஸ்ரீசாந்த் மற்றும் யுவராஜ் சிங்கின் பந்துவீச்சு மற்றும் களதடுப்பினால் போட்டி சமநிலையில் முடிவடைந்தது. அதன் பிறகு நடந்த பவுல் அவுட் முறையினால் இந்திய அணி வெற்றி பெற்றது.

தென்னாபிரிக்கா, நியூசீலாந்து ஆகிய ஆணிகள் சிறப்பாக விளையாடி அடுத்த சுற்றுக்கு தெரிவாகின. நான்கு தெற்காசிய கிரிக்கெட் அணிகளும் அடுத்த சுற்றுக்கு தெரிவாகின.
முதல் சுற்றில் பிரகாசித்த இலங்கையின் ஜெயசூரிய மற்றும் இதர இலங்கை வீரர்கள் இரண்டாம் சுற்றில் பிரகாசிக்க தவறினர். அதனால் இலங்கை அணி அரை இறுதிக்கு தெரிவாகமல் போனது. பாகிஸ்தானிடம் தோல்வியை தழுவிய ஆஸ்திரேலியா அணி, பிரட் லீயின் வங்கதேசத்திற்கு எதிரான ஹட்ரிக் மற்றும் ஹெய்டன் சைமண்ட்ஸ் ஆகியோரின் துடுப்பாட்டம் ஆகியவற்றால் அரையிறுதிக்கு முன்னேறியது. யுவராஜ் சிங் ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர்கள் அடித்து சாதனை உருவாக்கினார். (அதுவும் பிளின்டொப் கேலி செய்தமையால்), ஒரு வழியாக தென்னாபிரிக்கா மற்றும் இங்கிலாந்தினை வெற்றி கொண்டு இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது. பாகிஸ்தான் மற்றும் நியூசீலாந்து அணிகளும் அரையிறுதிக்கு தெரிவாகின. கிரிக்கெட் ஜாம்பவான் என அழைக்கப்பட்ட ஆஸ்திரேலியாவை இந்தியா போராடி தோற்கடித்தது. பாகிஸ்தான் நியூசீலாந்து அணியை வெற்றி கொள்ள இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகள் இறுதிப்போட்டியில் நுழைந்தன.

முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 156 ஓட்டங்களை பெற்றது. ஆரம்பத்தில் விக்கெட்கள் சரிந்தாலும் காம்பிர் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரின் ஆட்டத்தினால் சவாலான இலக்கை நிர்ணயித்தது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணியின் ஆரம்ப விக்கெட்கள் உடனே சரிந்தாலும் இம்ரான் நசிர் அதிரடி ஆடினார். அப்படி இருந்தும் பாகிஸ்தான் விக்கெட்கள் உடனே சரிந்தன. எனவே மீண்டும் ஒரு முறை மிஸ்பா ஹுல் ஹக் நம்பிக்கை தந்தார்.
ஒரு ஓவர் மீதமிருக்க 12 ஓட்டங்கள் பெற வேண்டும். மிஸ்பா ஹுல் ஹக் இரண்டாவது பந்தில் ஆறு ஓட்டங்களை பெற்றார். எனினும் பரபரப்பான நேரத்தில் அடுத்த பந்திலேயே இந்திய அணியிடம் வெற்றி வந்து சேர்ந்தது.
தான் தலைவராக பொறுப்பேற்ற முதல் தொடரிலேயே கோப்பை வென்று நம்பிக்கை அளித்தார் தோனி. இறுதிப்போட்டியின் நாயகனாக இர்பான் பதான், தொடர் ஆட்ட நாயகனாக பாகிஸ்தானின் சயிட் அப்ரிடி ஆகியோர் தெரிவாகினர். பல பல சாதனைகளுடன் கடந்த தொடர் சிறப்பாக முடிவடைந்தது.

மீண்டும் ஒரு கபில் தேவ் மற்றும் கங்குலி கிடைத்தது போல் தோனியை மக்கள் கருதிவருகின்றனர். இன்று வரை நடைபெற்ற தொடர்களில் ஆசிய கிண்ணபோட்டியில் மட்டுமே இந்திய அணி இவர் தலைமையில் தோல்வியை தழுவியது (அதாவது படுதோல்வி)

ஆக இம்முறை இன்னும் விறுவிறுப்பாக போட்டிகள் இருக்கும் என்றே கருதப்படுகின்றன.
குறிப்பாக இலங்கை இந்தியா அல்லது தென்னாபிரிக்கா ஆகிய அணிகளுக்கு தொடரை வெல்லும் சாத்திய கூறுகள் அதிகம். (காரணம் துடிப்பான இளம் வீரர்கள் மற்றும் அனுபவ வீரர்கள் இந்த அணிகளில் அதிகம் உள்ளனர்.) ஆஸ்திரேலியா அணியிணரையும் நம்ப முடியாது (அமைதியாக முண்டியடிப்பதில் அவர்களை மிஞ்ச யார் உள்ளனர்).
பொறுத்திருந்து பார்போம்..
நன்றி
அருண் சர்மா..

வரும் 20 20 உலகக்கிண்ண போட்டிகள் எப்படி இருக்கப்போகின்றன..?

வெறும் மூன்று மணித்தியால விளையாட்டு என்பதால் இப்போது இந்த போட்டிகளுக்கு ஏகப்பட்ட கிராக்கி.. அதுவும் எப்போதும் சிக்ஸர் மழை என்றால் சும்மாவா இருக்கும்..

முதல் தொடர் தென்னாபிரிக்காவில் சிறப்பாக நடந்து முடிந்தது..
அடுத்த தொடர் இங்கிலாந்தில் நடக்கவிருக்கிறது.. கடந்த தொடரில் அதிரடி ஆஸ்திரேலியா அணியிலிருந்து சிறிய வங்கதேச அணிகள் வரை எல்லா அணிகளுமே அதிரடி கண்டன... ஒரே ஒரு சதம் மட்டுமே காண முடிந்தது..கிறிஸ் கேயில் வெறும் 54 பந்துகளில் 117 ஓட்டங்களை பெற்றார்..என்ன பரிதாபம்..மேற்கிந்திய அணி படுதோல்விகளுடன் அடுத்த சுற்றுக்கு கூட தெரிவாகமல் போனது..

அதைவிட பெரிய ஆச்சரியம் தன்னைவிட பலமான மேற்கிந்தியாவை மிக இலகுவாக வெற்றிகொண்டு இரண்டாம் சுற்றுக்கு பங்களாதேஷ் அணி முன்னேறியது.. சிறிய டெண்டுல்கர் என்று வர்ணனையாளர்களால் அழைக்கப்பட்ட அணித்தலைவர் அஷ்ரபுலின் அதிரடி ஆடம் அனைவரையும் கவர்ந்தது..குறிப்பாக அவருடைய சிக்ஸர்கள்..

வயதானாலும் என் அதிரடி ஸ்டைல் மாறவில்லை என்பதை இலங்கையின் நம்பிக்கை வீரர் ஜெயசூரிய மீண்டும் ஒருமுறை நிருபித்தார்..கென்ய அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் வெறும் 44 பந்துகளுக்கு 88 ஓட்டங்களை குவித்தார்.. கூடவே அணித்தலைவர் மஹேல மற்றும் முபாரக் (யப்பா கடைசி ஓவர்ல நாலு சிக்ஸர்பா)
ஆகியோரின் உதவியுடன் 20-20 போட்டிகளில் எதிரணிக்கு எதிராக அதிக ஓட்டங்களை பெற்ற அணி என்ற பெருமையை பெற்றது..

கிரிக்கெட் ஜாம்பவான்கள் ஆஸ்திரேலியாவிற்கு இந்த முறை பெரிய அதிர்ச்சிகள் காத்திருந்தன..அதில் குறிப்பிடத்தக்கது ஜிம்பாப்வே அணியிடம் தோல்வியடைந்தது ஆகும்..எனினும் இங்கிலாந்துடனான போட்டியில் வெற்றி பெற்றதால் சராசரி வீதம் அதிகமாக காணப்பட்டதால் ஆஸ்திரேலியா அடுத்த சுற்றுக்கு முன்னேறியது..எனினும் அடுத்த சுற்றிலும் அவர்களுக்கு மாபெரும் அதிர்ச்சிகள் காத்திருந்தன..

இன்னொருமொரு பரபரப்பான போட்டியைப்பற்றி நான் குறிப்பிட்டாக வேண்டும். அது இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நடைபெற்ற போட்டி. ஏற்கனவே ஸ்காட்லாந்துடனான போட்டி மழையினால் கைவிடப்பட்டது..ஆகவே இந்த போட்டி இந்தியாவுக்கு முக்கியமான போட்டி. புதிய அணித்தலைவர்களுடன் (தோனி மற்றும் மாலிக்) இரண்டு அணிகளும் களமிறங்கின. ஆரம்பமே இந்தியாவுக்கு அதிர்ச்சிதான். சேவாக், யுவராஜ் போன்ற வீரர்கள் சோபிக்கவில்லை. எனினும் உத்தப்பா, தலைவர் தோனி மற்றும் இர்பான் பதான் ஆகியோரின் உதவியுடன் 141 ஓட்டங்களை (இப்போ இந்த ஸ்கோர் எல்லாம் ரொம்ப சுலபம்) பெற்றது. பாகிஸ்தான் வேகபந்து வீச்சாளர் ஆஸிப்பின் பந்து வீச்சு இந்திய அணியினருக்கு மிகவும் கடினமாக இருந்தது.பதிலுக்கு துடுப்பாடிய பாகிஸ்தானும் இந்திய பந்துவீச்சுக்கு சரிந்த வண்ணம் இருந்தனர். ஒரு கட்டத்தில் இந்திய வெற்றி பெரும் என்ற நிலையில் இருந்தது. எனினும் மிஸ்பா ஹுல் ஹக் மற்றும் ஜசிர் அரபாத் ஆகியோர் இறுதிவரை போராடினர்.

(தொடரும்)

ஏன் எனக்கு ப்லோக்ஸ்போட் உருவாக்குவதற்கு ஆசை வந்தது..

அன்பான இணைய நண்பர்களே..
உங்களைப்போலவே எனக்கும் இவ்வாறு ஒரு யோசனை உண்டானது..
எனது அனுபவங்களை பகிர்ந்து கொள்வதற்காக இதை ஒரு வாய்ப்பாக கருதுகிறேன்..
என் பெற்றோர்க்கு அடுத்து நான் அதிகம் அன்பும் மரியாதையும் வைத்திருப்பது உங்கள் மீதுதான்..

நன்றி..
அன்புடன் பண்புடன் உங்களுடன் உரிமையுடன்..
அருண் சர்மா..